அழைப்பு மணி தொடர்ச்சியாக மூன்று முறை அடித்ததும் எழுந்தேன். கிராக்கி வந்ததற்கு அடையாளம். காலை ஆறு மணி கூட ஆகவில்லை, அதற்குள்ளா? பாத்ரூம் சென்று பல் விளக்கினேன். உதட்டருகே காயம் வலித்தது.

வெறித்துவிட்டு, “வெட்டி நாறாக்கிடுவேன் நாயே. எங்கிட்டயா வெளயாடிப் பாக்கறே?” என்று அவள் கன்னத்தில் அறைந்தான்.

“சத்தியமா தெரியாதுண்ணே” என்று தடுமாறி விழுந்தவளை இடுப்பிலிருந்த பெல்ட்டைக் கழற்றி விளாசினான்.

எழ முயற்சித்தவளை நெற்றியில் அடித்துக் கீழே தள்ளினான்.

“இடம், சோறு, மருந்து எல்லாம் கொடுத்து சும்மா படுத்து சம்பாதினு விட்டா, வேலையா காட்டறே?” என்று அவளை எட்டி உதைத்தான்.

செருப்புக் கால் அவள் பெண்குறியில் பட, வலியில் அலறிப் புரண்டாள்.
மறுபடி செருப்புக் காலால் அவள் பிட்டத்தில் ஓங்கி உதைத்து அழுத்தினான். துடித்தாள்.

முகத்தையும் இடுப்புக்குக் கீழேயும், வலியைப் பொருட்படுத்தாமல் சுத்தம் செய்துகொண்டு அறைக்குத் திரும்பினேன். ஒற்றை ஊதுபத்தி ஏற்றினேன். தலையணைக்கு உறை மாற்றி, கண்ணுக்குத் தெரிந்த சில்லறை நோட்டுக்களை பொறுக்கி மறைத்தேன். பீரோவிலிருந்து இரண்டு ஆணுறைகளை எடுத்து வைத்தேன். உள்ளாடை தெரியும்படி மெலிதான மேலாடை அணிந்தேன். மார்பை இரண்டு கைகளாலும் உயர்த்தி, தூக்கலாகத் தெரியும்படி சரி செய்து கொண்டேன். அனேகமாகத் தீர்ந்து போயிருந்த உதட்டுச் சாயக்கட்டியை எச்சிலால் நனைத்து உதட்டில் பூசினேன். தலைமுடியை சரி செய்து கொண்டு வாயிலருகே சென்றேன். கதவை முழுவதும் திறக்காமல், உள்ளிருந்தபடியே, வந்தவனைப் பார்த்துப் புன்னகை செய்தேன். வயதானவன். இம்மாதிரி ஆட்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

“கத்தி, துப்பாக்கி எதுனா வச்சிருக்கியா? சட்டை, பேன்ட் எல்லாம் அவுத்துக்காட்டு” என்றேன்.

சட்டையைக் கழற்றினான். மாநிறம் என்றாலும், அவன் உடலெங்கும் பளபளப்பு. பேன்ட்டைக் கழற்றிவிட்டு நின்றான். “அதையும் கழட்டு” என்றேன். ஆடையின்றி நின்றவன் மேல் சற்றே பரிதாபப்பட்டேன்.

“என்னய்யா இப்படி வத்தலா போயிருக்குது? நிக்குமா?” என்றேன்.

வசீகரமாகச் சிரித்தான்.

“வியாதி ஏதாவது இருந்தா சொல்லிடுயா” என்றேன். இல்லையென்று தலையசைத்து மறுபடி வசீகரமாகச் சிரித்தான். இவனிடம் பயப்படத் தேவையில்லை என்று தோன்றியது. “முன்னே பின்னே தெரியாத வாடிக்கைய சோதனை பண்ணாம எடுக்குறதில்லை, தப்பா நினைக்காதயா. சரி, அப்படியே உள்ளே வரதுனா வா, இல்லை எல்லாத்தையும் மாட்டிக்கிட்டு வா” என்றேன். கதவைத் திறந்தேன்.

“உள்ளே வேண்டாம், வெளியே போகலாம் வா” என்றான்.

“வெளியவா?” முதல் நெருடல். “பணம் வச்சிருக்கியா? முதல்லயே கொடுத்துடணும்” என்றேன்.

“எவ்வளவு?” என்றான்.

“வேலையையும் நேரத்தையும் பொறுத்து. கைவேலை போதும்னா இருபது ரூவா, வாய்வேலை அறுபது ரூவா, படுக்கணும்னா தடவைக்கு நூத்தம்பது, ராத்திரிக்கு ஐநூறு. ரப்பர் வச்சிருக்கியா? இல்லைனா, ரப்பர் காசு தனி. ஒண்ணு பத்து ரூவா.”

“ஒரு நாளைக்கு எவ்வளவு?” என்றான்.

வியந்தேன். அதிர்ஷ்டமா இல்லை விவகாரமா? பதில் சொல்லாமல், “உன்னை யாரு அனுப்பிச்சது?” என்றேன்.

“நீ தான்” என்றான்.

இரண்டாவது நெருடல். “நானா? இதுக்கு முன்னே உன்னைப் பாத்ததே இல்லை. ப்ரோகர் யாரு? அவங்களுக்கும் கமிசன் தரணும். உன்னை யாரு இங்கே அனுப்பிச்சது? பொன்சாமியா?” என்றேன் மறுபடி.

“நீ தான்” என்றான்.

மரியாதையைத் தொலைத்தேன். “யாருயா நீ? காலங்காலைல சாவுகிராக்கி?”. உள்ளுக்குள் பயந்தாலும் வெளிக்காட்டவில்லை. கண்கள் பொன்சாமியைத் தேடின.

“சாவாத கிராக்கி” என்று சிரித்தான். அச்சமூட்டாத அமைதியான சிரிப்பு. “நாள் முழுக்க என் கூட இருக்க எவ்வளவு?. வேணாம்னா சொல்லு, போயிடறேன்” என்றான் அழுத்தமாக.

“இருயா. ரெண்டாயிரம் ரூவா, சரியா?” என்றேன்.

“நான் சொல்றதை மறு பேச்சில்லாமல் கேட்கணும், சம்மதமா?” என்றான்.

“ரொம்ப ஆபாசமா போகமாட்டேன். ஒரு ஆளுக்கு மேலே இருந்தா வாபசாந்துருவேன். கத்தி வச்சிருக்கேன்” என்றேன்.

“இந்தா முன்பணம்” என்றுச் சிரித்தான்.

இந்தச் சிரிப்பு சிரிக்கிறானே? “இருயா” என்று கையசைத்து விட்டு உள்ளே சென்றேன். இரண்டாயிரம் ரூபாய்க்கு எத்தனை கடன் அடைக்க முடியுமென்று திட்டம் போட்டபடியே தயாரானேன்.

கீழே இறங்கி வந்தோம். வீட்டு வாசலில் ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த பொன்சாமியை எழுப்பினேன். “எங்கே போவணும்னு பொன்னாண்ட சொல்லுயா” என்றேன்.

“உனக்குப் பிடிச்ச இடமாப் போவலாம்” என்றான்.

எனக்கு எரிச்சல் வந்தது. பணம் வாங்கியாகிவிட்டதே? “பொன், வண்டியெடு. ஏறி உக்காருயா. மொதல்ல காபி சாப்பிடலாம்” என்றேன்.

சரவணாபவன் காபியில் தொடங்கி இட்லி, வடை, பொங்கல், பூரி மசாலா என்று வரிசையாகச் சாப்பிட்டோம். பசி. அத்தனை வலியிலும் பசி பிடுங்கியது.

“இந்தாடி, ரெண்டு ரொட்டித்துண்டை வச்சுக்க. பசி எடுத்தா சாப்டு” என்றாள்.

“வேணாங்க்கா. அதான் காசு வேறே குடுத்திருக்கியே?”

“அத சாப்பாட்டுல செலவழிக்காதடி. ஊருக்குப் போய் வீட்ல குடு. ஓடு”

“அக்கா. நீ தெய்வங்க்கா” என்று கட்டிப்பிடித்தவளின் கண்ணீரைத் துடைத்து “நல்லாரு, ஓடு” என்றாள்.

தன் கண்ணீரைத் தடுக்க முடியாமல் அழுதாள்.

“என்னுடைய சாப்பாட்டுச் செலவைக் கணக்கிலிருந்து கழிச்சிக்கயா” என்றேன்.

“பரவாயில்லை” என்றான்.

“சரி, எங்கே போகலாம்? பொன் கிட்டே சொல்லி ரூம் போடவா?”

“கொஞ்சம் பேசிக்கிட்டிருப்போமே?”

“பேசினாலும் படுத்தாலும் ரேட் ஒண்ணுதான்யா”.

என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். என் கிராக்கிகளுக்கெல்லாம் பணத்தைக் கொடுத்தவுடனே படுத்தாக வேண்டும். இவன் தாமதம் எனக்கு விபரீதமாகத் தோன்றியது. “சரி, பேசுயா”.

“நீ தான் பேசேன்?” என்றான்.

“என்னய்யா ரோதனை?”. எரிச்சல் வந்தாலும் அமைதியானேன். “சரி, உன்னை யாரு அனுப்பிச்சது? அதாவது சொல்லுயா”

“நீ தான்”

“யோவ்” என்ற என்னைத் தடுத்துச் சிரித்தான். “சொல்றேன்.. நேத்து ராத்திரி உன் வீட்டுக்கு பொன்சாமி கூட்டி வந்தான். போதையில் மறந்துட்டானு தோணுது” என்றான். என்னை உற்றுப் பார்த்தான்.

“எங்கடி சின்னவ? எங்க அவ?”

“எனக்குத் தெரியாதுணே”

“முண்டை” என்று அவளைப் பிடித்துத் தள்ளினான்.

“தொழில் கத்துக்க உங்கிட்ட ரெண்டு நாள் விட்டா, எங்கடி காணாம போயிடுவா?”

கீழே விழுந்தவளின் தலைமுடியைப் பிடித்தெழுப்பி, “உயிரோட கொளுத்திருவேன். உண்மைய சொல்லு. எங்க போனா?” என்றான்.
“உண்மையிலயே எனக்குத் தெரியாதுணே”

இரண்டு கைகளையும் அவள் முகத்தில் இடித்துத் தள்ளினான்.
அவளுக்கு மூக்கிலடிபட்டு விண்ணென்று பொறி தட்டியது. அழுதாள்.

“எம்எல்ஏ வராரு இன்னிக்கு. பிஞ்சுவயசுப் பொண்ணுக்கு அஞ்சாயிரம் பேசி வச்சிருந்தேன். இப்ப என்னடி சொல்வேன்? எங்க அவ?”
உறுமினான். புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை எடுத்து அவள் விரல் நகத்தில் வைத்து அழுத்தினான்.

“எங்கடி அவ? சொல்லாம விடமாட்டேன். எங்க அவ?”

விரலின் சதையுடன் சிகரெட் நெருப்பு கலந்து புகைந்து கரைந்து கொண்டிருந்தது.

அவள் அலறினாள். “விட்டுறுணே, விட்டுறுணே”.

திடுக்கிட்டுக் கைகளைத் திருப்பிப் பார்த்துக் கொண்டேன். பர்னால் அப்பியிருந்த புண்ணின் வலி இன்னும் குறையவில்லை. “அத்தினியும் பாத்தியா?”

“நீ அலறினதை கேட்டேன். இப்ப வேணாம் சார்னு என்னைத் தடுத்துட்டான் பொன்” என்றான் அவன் அமைதியாக.

“தொழில்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்யா. கவலைப்படாதே, நீ குடுக்குற காசுக்கு உனக்கு திருப்தியா நடந்துக்குவேன். போலாம் வாயா” என்று எழுந்தேன். கிழிந்த புடவையில் தெரிந்தவற்றை மறைத்தவாறு நடந்தேன்.

“உன் புடவை ஏன் இப்படிக் கிழிஞ்சிருக்குது?”

“யோவ், கழட்டுறதுக்குத்தான்யா நாங்கள்ளாம் புடவை கட்டுறதே! இதுல புடவை எப்படி இருந்தா என்னய்யா?”

“உனக்கு ஒரு புடவை வாங்கித்தரவா?” என்றான்.

“என்னய்யா நீ, உன் பேச்சே அலாதியா இருக்குதே? எனக்கு நீ ஏன் புடவை வாங்கித்தரணும்?”

“வெளியெடத்துல என் கூட இந்த மாதிரி வந்தா எனக்கு நல்லா இல்லைனு வச்சுக்கயேன்?”

முருகன் கோவில் எதிரே புடவைக்கடையில் இறங்கினோம். கடையில் இரண்டு புடவைகள் பார்த்தேன். என்ன தோன்றியதோ, இரண்டையுமே வாங்கிக் கொண்டேன். “யோவ், ரெண்டு புடவை எடுத்தேன்யா. நீ கண்டிப்பா கணக்குல கழிச்சுக்கயா, அப்பத்தான் எடுத்துக்குவேன். இருயா, ஒரு புடவைய இங்கயே மாத்திக்கிட்டு வரேன்”

“சரி”

புதுப்புடவையில் வெளிவந்த எனக்குப் புத்துயிர் பிறந்தது போலிருந்தது. பொன்சாமியின் ஆட்டோ அருகில் ஒரு சிறுவன் லாட்டரிச்சீட்டு விற்றுக்கொண்டிருந்தான். “யக்கா, ஒரு சீட்டு வாங்குக்கா. முதல் பரிசு பத்து கோடிக்கா.” “வேணாம் போடா” என்று வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். “எப்டியா இருக்கு புடவை?” என்றேன். புன்னகைத்தான்.

“போணி பண்ணுக்கா” என்று விடாமல் கெஞ்சினான் சிறுவன்.

“டேய், கைல சில்லறை இல்லடா” என்று நான் சொல்லச்சொல்லக் கேட்காமல், “சார், நீ வாங்கிக்க சார். உனக்குத்தான் விழப்போவுது” என்று கெஞ்சினான் சிறுவன்.

“ஒரு சீட்டு வாங்குயா, என்னவோ சின்ன பையன்.. கேடித்தனம் செய்யாம பொழக்கிறான் இல்ல?” என்றேன்.

“சரி. அஞ்சு சீட்டு எடுக்கிறேன், நீயே உன் கையால எடுத்துக் கொடு” என்றான், என்னிடம்.

எடுத்துக் கொடுத்தேன். என்னிடமே கொடுத்து விட்டு, “நீயே வச்சுக்க” என்றான்.

“லாட்டரியாவது மண்ணாவது, எனக்கேதுயா அத்தனை அதிர்ஷ்டம்?”

“பரிசு விழுந்தா எனக்கு பாதி கொடுத்துரணும், சரியா?” என்றான்.

“சத்தியமா குடுத்துறுவேன்யா” என்றபடி லாட்டரிச்சீட்டுக்களைச் சுருட்டி என் இடுப்பில் செருகினேன்.

“பரிசுப்பணத்தை வச்சுக்கிட்டு என்ன செய்யப்போறே?”

“சுதந்திரம் வாங்கப் போறேன்”

“சுதந்திரமா?”

“பத்தினியானாலும் பஜாரியானாலும், பொண்ணுக்கு சுதந்திரம் வேணும்யா. அதுக்கெல்லாம் எத்தினி காந்தி வந்தாலும் பத்தாது. பஜாரிக்காவது பணம் கொடுத்தா விடுதலை. ம்…இதெல்லாம் உனக்கு என்ன தெரியப்போகுது?”

“சரி, இப்ப எங்கே போகலாம் சொல்லு” என்றான்.

நீண்ட நேரம் யோசித்து விட்டு, “தப்பா நினக்காதயா. ஆறு வருசம் கழிச்சு இப்பத்தான் புதுப்புடவை கட்றேன். பத்து நிமிசம் முருகன் கோயிலுக்கு போலாம்னு தோணுதுயா, பரவாயில்லயா? அதுக்கும் கணக்குல அம்பது ரூவா கழிச்சுக்க” என்றேன்.

“அதெல்லாம் வேண்டாம்” என்று சிரித்தான். “நீ போயிட்டு வா. நான் இங்க வண்டில இருக்கேன்” என்றவன், “இந்தா இதை அப்படியே உண்டியல்ல போட்டுரு, தானம் செஞ்சுடு, இல்ல ஏதாவது பண்ணிரு” என்று ஒரு காகித உறையைக் கொடுத்தான். உறைக்குள் ரூபாய்க் கற்றை தெரிந்தது. அவன் முகத்தில் பொருள் செறிந்த புன்னகை. என்ன சொல்கிறான் இவன்?

“காசுடி. காசு. ஒரு பொண்ணை தொழில்ல இறக்க முடியலைனா எத்தனை நஷ்டம் தெரியுமா? சின்னவளுக்கு பதிலா நீ தான் என் முதலைத் திருப்பித் தரணும்”. விகாரமாகச் சிரித்தான்.

“நீ என்ன சொன்னாலும் கேட்டுக்குறேன், என்னை அடிக்காதேணே.
இருக்குற காசெல்லாம் நீயே எடுத்துக்கண்ணே”

“பொறம்போக்கு. சின்னவளுக்கு முப்பதாயிரம் ரூபாய். நீதான் தரணும். எப்படிறீ குடுப்பே?” என்று அவள் நெஞ்சில் மூச்சைப் பிழிவது போல் அழுத்தினான்.

அதிர்ந்தாள். இங்கே விடுதலைக்கு விலை முப்பதாயிரமா?

“உன் கிட்டே எங்கடி தேறும்? நீயே கிழிஞ்சு போன நாறு, உனக்கு எவன் குடுப்பான் அத்தனை காசு? அதான், உன்னை உறுப்பு மார்கெட்ல வித்துரலாம்னு முடிவு பண்ணிட்டேன். உன்னோட உறுப்புங்களுக்கு நாப்பது அம்பதாயிரம் கிடைக்கும். உனக்கும் சின்னவளுக்கும் சேத்து நீயே கடனை அடச்சிட்ட மாதிரி இருக்கும்” என்றபடி அவள் கண்களைக் கத்தியால் நோண்ட வந்தான்.

“வேண்டாம்ணே, என்னைக் கொன்னுறாதண்ணே.. கடவுளே கடவுளே..” என்று முகத்தைப் மறைத்துக்கொண்டு அழுதாள்.

பயத்தில் உடல் நடுங்கி சொட்டு ஒன்றுக்குப் போனாள்.

“ரெண்டு நாள் டயம் தரேன், அதுக்குள்ளாற சின்னவளை கொணந்து சேத்துரு. இல்ல, உன்னை கூறு போட்டு வித்துறுவேன்”.

அவள் முகத்தில் கத்தியால் அறைந்தான்.

“அவ எங்கிருக்கான்னு எனக்கு சத்தியமா தெரியாதுண்ணே” என்றவளை வெறித்துப் பார்த்தான்.

“சரி, பத்து நிமிசத்துல வந்துருவன்யா. ரொம்ப நன்றியா”. என் கண்ணில் வெளிப்பட்டக் கண்ணீரை அவன் கவனிக்குமுன் சொந்த ஊருக்கு அடுத்த பஸ் எப்போது என்று நினைத்தபடி கோயிலுக்குள் நுழைந்தேன். உண்டியலில் போடலாமென்று உறையைப் பிரித்துப் பணத்தை எண்ணிப் பார்த்தேன். முப்பதாயிரம் ரூபாய் இருந்தது. சட்டென்று திரும்பிப் பணத்துடன் ஆட்டோவுக்கு ஓடினேன். பொன்சாமி ஆட்டோவைத் துடைத்துக் கொண்டிருந்தான். “பொன், எங்கேடா அந்த கிராக்கி?”.

– 2010/11/09