“ஏண்டா செக்ஸ் பத்தி சொல்லாம கதை எழுதமாட்டியா” கண்ணன் இப்படித்தான் ஆரம்பித்தான். கண்ணணைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். என்னோடு படித்தவன் என்றாலும் நன்றாகப் படித்தவன். ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் இருந்த சமயங்களில் எல்லாம், எங்கள் ஊரில் இருந்த சில அழகான பெண்களுக்கு கதாநாயகன். இது என்னைப் போன்ற சிலருக்கு பயங்கர பொறாமையாக இருக்கும். கில்லி, கிரிகெட், காதல் மட்டுமில்லாமல் எல்லா விஷயங்களும் பேசுவான். உடனே “அமெரிக்கா-கியூபா விவகாரம், நெரூடா கவிதைகளாக இருக்கும்” என நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல. விடலைகளுக்கான விவகாரங்கள் தான். அந்தக் காலகட்டத்தில், அந்த விஷயங்களில் “எங்கள் அண்ணன்” கண்ணன் ஒரு சூரப்புலி.
அவன்தான் நேற்று அப்படிக் கேட்டான்.
“இல்லையே. எழுதுவேனே. ஆனா நான் எல்லாம் எப்போ பெரிய எழுத்தாளன் ஆகிறது. அப்படி எழுதினா உடனே படிக்கிறாங்கடா”
“நான் ஒரு மேட்டர் சொல்றேன். குஜால் மேட்டர். ஆனால் நல்ல கதையா நீ மாற்றி எழுதணும். சரியா?”
சவாலில் வென்றால் ‘டிரீட்’ உண்டென உறுதியளித்தான். சரியென்று ஒத்துக் கொண்டேன்.
அவனுக்கு பக்கத்து வீட்டில் ராஜேந்திரன் என்ற போலீஸ்காரர் உண்டு. அதிசயம் என்னவென்றால் அவர் பைசா லஞ்சம் வாங்காத போலீஸ் என்பது. அதற்கு காரணம் இருக்கிறது. கல்யாணம், குடும்பம், குழந்தை குட்டி என்ற எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாத மனுஷன்.
மற்ற எந்த விவகாரமாக இருந்தாலும் அவரை அனுப்பும் இன்ஸ்பெக்டர், விபச்சார கேஸ்களுக்கு மட்டும் அனுப்புவதில்லை. இவர் சரியான சபலக் கேஸ் என்பதால் இந்த விவகாரத்தில் மட்டும் கோட்டை விட்டு விடுகிறார்.
ஒரு சமயம் கச்சேரி மேட்டில் ஒரு வீட்டில் சிலர் சந்தேகத்திற்குரிய விதத்தில் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. சந்தேகம் என்றால் வேறெதுவுமில்லை. விபச்சாரம்தான். ராஜேந்திரனைப் பற்றி தெரியாத புது இன்ஸ்பெக்டர் அவரை அனுப்பி இருக்கிறார். வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்துவிட்டார். அடுத்த இரண்டு நாட்கள் ராஜேந்திரனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. விசாரித்து விட்டு இன்ஸ்பெக்டர் அந்த வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்தவர்கள் புதிதாக வந்த பெண்ணைக் காணவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இரு தரப்பினருக்கும் அதிர்ச்சி. ராஜேந்திரன்தான் அவளைக் கொடைக்கானல் அழைத்து சென்று இருக்கிறார். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் “தள்ளிக் கொண்டு”.
சஸ்பெண்ட், டிஸ்மிஸ் என்று போக வேண்டிய விவகாரம் மேலதிகாரிகளின் தயவால் சுமூகமாக முடிந்திருக்கிறது. விபச்சார வழக்குகளுக்கு செல்லும் போது மட்டும் இவரைக் ‘கழட்டி’விட்டுச் செல்வதே மற்ற போலீஸ்காரர்களுக்கு பெரும்பாடு ஆகிவிடுகிறது. சிறு பிள்ளையைப் போல அடம் பிடிப்பாராம். “நானும் வருகிறேன். நானும் வருகிறேன்” என்று.
நான் சொன்ன விவகாரம் இனிமேல்தான் வருகிறது. லலிதா புதிதாகக் ராஜேந்திரன் பக்கத்து வீட்டுக்கு குடி வந்தவள். முப்பது வயதிருக்கும். ‘செமக் கட்டை’ என்று கண்ணன் வர்ணித்தான். எல்லோரும் அவளை நடிகை ஹீரா போல் இருப்பதாகச் சொல்கிறார்களாம். அவளோடு தற்போதைக்கு யாரும் இல்லை. தனியாகத் தான் அந்த வீட்டில் வாசம்.
கொஞ்ச நாள் யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருந்திருக்கிறாள். ஆனால் நிலைமை வெகு சீக்கிரமாக மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம் ராஜேந்திரன் அவள் வீட்டிலேயே தவம் இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். ரிட்டயர்டு ஆகும் சமயத்தில் அந்தாளுக்கு எதற்கு இதெல்லாம் என்பவர்கள் ஒரு குழுவாகவும், இதில் என்ன தவறு என்று பேசுபவர்கள் ஒரு குழுவாகவும் ஊருக்குள் பிரிந்து விட்டார்கள்.
ஊரில் இருந்த சில இளந்தாரிகளுக்கு அரைக் கிழவனுக்கு லலிதா சிக்கியதில் ஏகப்பட்ட பொறாமை. ராஜேந்திரன்-லலிதா கதை ஊருக்குள் பரவலாக சுற்றுவதில் இவர்களின் கைங்கர்யம் அதிகமாக இருந்தது. செந்தில் என்ற சிறுவன்தான் தகவல் பரப்பும் கடமையைச் செய்து வந்தான். இளந்தாரிகள் சொல்லித் தருவதை ஊருக்குள் அப்படியே ஒப்பிப்பான். சில சமயம் அவனே இட்டுக் கட்டும் அளவிற்கு தேறி இருந்தான்.
“அந்த அக்கா துணியே போடலை. சன்னல் வழியா எட்டிப் பார்த்தேன். அப்போ அந்த போலீஸ் மாமா…..அய்ய்ய்ய்யயய” என்று முழுதாகச் சொல்லி முடிக்காமல் ஓடுவான். பலருக்கும் “சப்”பென்று ஆகிவிடும். ஆனால் உறுதிப் படுத்தப் பட வேண்டிய அந்த விஷயத்தை மட்டும் உறுதிப் படுத்திக் கொண்டார்கள்.
திடீரென்று ஒரு ஞாயிற்றுக் கிழமை லலிதா வீட்டில் கூட்டம். அவள் தூக்குப் போட்டுக் கொண்டாள். தூக்குப் போட்டு இரண்டு நாட்கள் ஆகி இருக்கலாம். சற்று வாடை வர ஆரம்பித்து விட்டது. ராஜேந்திரன் வீடும் திறக்கப்படாமல் இருந்தது. பரபரப்பு தொற்றிக் கொண்ட சில மணி நேரத்தில் ஆற்றங்கரையில் ராஜேந்திரனின் பிணம் கிடப்பதாக தகவல் வர பலரும் அங்கே சென்றனர்.
ஊருக்குள் இவர்களின் விஷயம் தெரிந்து விட்டதால் தற்கொலை செய்து கொண்டார்கள் எனப் பேசிக் கொண்டனர். சிலர் வேறு மாதிரி சொன்னார்கள். ராஜேந்திரனுக்கு சிறு வயதில் ஏதோ ஒரு பெண்ணிடம் தொடர்பிருந்தததாம். அவளின் மகள்தான் லலிதாவாம். இந்த விஷயம் இரண்டு பேருக்கும் இப்பொழுதுதான் தெரிந்திருக்கிறது. தந்தை மகள் என்ற குற்றவுணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டார்களாம்.
கண்ணன் சொல்லி முடித்தான். எது உண்மை என்று அவனுக்குத் தெரியவில்லை.
“செக்ஸ் இல்லாத கதை” என்று தலைப்பிட்டிருக்கிறேன். இனிமேல்தான் எழுத வேண்டும். எனக்கு என்னமோ சன்னலுக்குள் செந்தில் பார்த்த விஷயம்தான் எழுத வருகிறது. ‘டிரீட்’ கிடைக்காது என்று தோன்றுகிறது.
– ஆகஸ்ட் 8, 2006